மேலும் பணக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்..
பெப்சி, மெக்டொனால்டு உள்ளிட்ட நிறுவனங்களைவிடவும், அதிக சொத்து வைத்திருக்கும் நபராக எலான் மஸ்க் மாறியுள்ளார். ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான். புளூம்பர்க் நிறுவனத்தின் கோடீஸ்வரர்கள் குறியீடு என்ற பட்டியலில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து மஸ்கின் சொத்து மதிப்பு மேலும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளதாக இந்த குறியீடு சுட்டிக்காட்டுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்தாண்டு அவரின் டெஸ்லா நிறுவன பங்குகள் சரிந்ததால் அவரின் சொத்து மதிப்பு 40 விழுக்காடு வரை குறைந்து 164 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வீழ்ந்தது. கடந்தாண்டு 40 விழுக்காடு விழுந்த டெஸ்லா நிறுவன பங்குகள் பூமராங் போல மீண்டும் வந்து தற்போது 80 % உயர்ந்தது. இதனால் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் கூடுதலாக பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் அவரின் சொத்து மதிப்பு 223 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் , இந்த மாதம் அது 270 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பேஸ்புக் ஓனர் மார்க், என்விடியா ஓனர் ஜென்சன், ஆரக்கிள் நிறுவன ஓனர் லாரி எல்லிசன் ஆகியோர் மட்டுமே இந்தாண்டில் அதிகம் சம்பாதித்த நிலையில் மார்க் இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளார். டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை உயர்வு, அமெரிக்க பொருளாதார நிலை மேம்பாடு, உலகளவில் மின்சார கார்கள் தேவை அதிகரிப்பு ஆகிய காரணிகள் மஸ்கின் சொத்து மதிப்பை உயர்த்தியது. டெஸ்லாவை மட்டும் நம்பாமல் பெரிய நிறுவனங்களிலும் தனது முதலீட்டை போட்டு வைத்துள்ளார் எலான் மஸ்க்,,குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், நியூராலிங்க்,தி போரிங் கம்பெனி, எக்ஸ் ஏஐ, உள்ளிட்ட நிறுவனங்களிலும் மஸ்க் முதலீடு செய்துள்ளார். பூமியிலேயே அதிக சொத்து வைத்திருக்கும் நபராக உள்ளார் எலான் மஸ்க், கடந்த 2021-ல் 340 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்திருந்த மஸ்க், மீண்டும் உலகிலேயே அதிக பணம் வைத்திருக்கும் நபராக மாறியுள்ளார்.