டெஸ்லாவுக்கு அரசு கொடுத்த 2 ஆப்சன்கள்..
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவுக்கு வந்து தனது நிறுவன உற்பத்தியை தொடங்கலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சில சலுகைகளை எலான் மஸ்க் கேட்டதாகவும், அரசு 2 ஆப்சன்கள் கொடுத்ததாக கூறிய அவர், இந்தியாவில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களும், டாடாவும் மஹிந்திராவும் மின்சார கார்கள் தயாரித்து வருவதாகவும் கூறினார். தற்போது டெஸ்லாவும் இந்தியாவுக்கு வரட்டும், அவர்களையும் சமமாக நடத்துவோம் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். முதலாவதாக இந்தியாவில் உற்பத்தி செய்தால் மானியம் தருவோம் என்றும் இல்லை அது தேவையில்லை என்றால் குறைவான இறக்குமதியை அளிப்போம் என்ற இரண்டு சலுகைகளை பியூஷ் அளிக்க முன்வந்ததாக கூறினார். போதுமான மின்சார சார்ஜிங் கட்டமைப்பும் இந்தியாவில் தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்கும் நீண்டகால பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் இந்தியா வருவதாக இருந்த எலான் மஸ்க் , கடைசி நேரத்தில் இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டு சீனா சென்றது விமர்சிக்கப்பட்டது. தொழில் முதலீடு செய்வதில் கில்லாடியான மஸ்க், இந்தியாவில் விரைவில் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஆலையை இந்தியாவில் அமைப்பார் என்றும் கூறப்படுகிறது. டெல்லியில் சில விண்வெளிதுறை ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகளை மஸ்க் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்தின் செயற்கைக்கோள் சார்ந்த இணைய வசதிக்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.