சிங்கப்பூரில் முதல் எச்டிஎப்சி வங்கி கிளை..
இந்தியாவில் பிரபல தனியார் வங்கியாக வலம் வருவது எச்டிஎப்சி நிறுவனம். இந்த நிறுவனம் தனது முதல் கிளையை சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை திறந்தது. சிங்கப்பூர் நிதி அமைப்பான எம்ஏஎஸ் என்ற அமைப்பு, அண்மையில் எச்டிஎப்சி வங்கி தங்கள் நாட்டில் செயல்பட எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்று அளித்தது. கடந்த 15 ஆம் தேதி இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதையடுத்து எச்டிஎப்சி வங்கி, சிங்கப்பூரில் தனது கிளையை திறந்திருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள், அவர்கள் சார்ந்த கடன் தேவைகளை இந்த வங்கி பூர்த்தி செய்யும். அந்த வங்கியின் சர்வதேச பிரிவு தலைவர் ராகேஷ் சிங் இந்த வங்கியினை திறந்து வைத்தார். சர்வதேச நிதி மையங்களில் ஒன்றாக திகழும் சிங்கப்பூரில் எச்டிஎப்சி வங்கி கிளை திறந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவது மகிழ்வளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஹாங்காங், பஹ்ரைன், துபாய், சிங்கப்பூர் மற்றும் குஜராத் சர்வதேச நிதிநுட்ப நகரில் ஒரு வங்கிக் கிளை என மொத்தம் 5 சர்வதேச கிளைகளை எச்டிஎப்சி வங்கி கொண்டுள்ளது. கென்யா, அபுதாபி, துபாய் மற்றும் லண்டனிலும் எச்டிஎப்சி வங்கிக்கு கிளை அலுவலகங்கள் உள்ளன. கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை முடிந்த காலகட்டத்தில் எச்டிஎப்சி வங்கியின் சர்வதேச பிரிவு வணிகம் 9.06 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.