செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு..
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் புதியதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் செபியின் தற்போதைய தலைவர் மதாபி புரி புச்சுக்கும் அதானி நிறுவனத்துக்கும் பங்கு உள்ளது என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.
இருவருக்கும் இடையே வணிக ரீதியில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ள ஹிண்டன்பர்க், கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானியின் பங்குகளை மதாபியும் பயன்படுத்துவதாக அதிரடி குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மதாபியும் அவரின் கணவர் தாவல் புச்சும் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதானி குழுமம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹிண்டன்பர்க் அறிக்கை அபாயகரமானது என்றும், ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் கவுதம் அதானி தரப்பு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முழு நேர உறுப்பினரான மதாபி, 2022-ல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி மீது ஹிண்டன்பர்க் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனை முற்றிலுமாக மறுத்து வந்த கவுதம் அதானி, விசாரணைக்கு தயார் என்று கூறினார். இதுவரை செபி அவர் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து ஹின்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரம் மதாபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் பணியை தொடங்கிய மதாபி 2011 வரை அங்கேயே வேலை செய்தார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள கிரேட்டர் பசிபிக் கேபிடன் நிறுவனத்தில் 2017 வரை பணியாற்றினார். பின்னர் 2017 ஆம் ஆண்டு செபியின் முழுநேர உறுப்பினரான மதாபி, கடந்த 2022 மார்ச் மாதம் செபியின் தலைவரானது குறிப்பிடத்தக்கது.