19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஹியூண்டாய்..
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஹியூண்டாய் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. 19பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அந்நிறுவனத்தின் மதிப்பு இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வணிகத்தில் 17.5% பங்குகளை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்குகள் வெளியிடும்போது தேவைக்கு ஏற்ப சிறு சிறு மாறுதல்கள் இருக்கலாம் என்று ஹியூண்டாய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி மும்பையில் பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்ச்சி நடக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ல் எல்ஐசி நிறுவனம் 20,660 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியிட்டதே இதுவரை சாதனையாக இருக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் ஹியூண்டாய் நிறுவன ஐபிஓ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹியூண்டாயின் மதிப்பு 18- 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இடையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய கார் சந்தையில் 41% பங்கை மாருதி சுசுகி நிறுவனம் கொண்டுள்ளது. அதன் சொத்து மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஹியூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு தொடர்ந்து 15 முதல் 17 விழுக்காடாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.