ஹியூண்டாய் ஐபிஓ இரண்டாவது நாள் அப்டேட்..
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட ஹியூண்டாய் ஐபிஓ இரண்டாவது நாளில் 42 விழுக்காடு மட்டுமே விற்கப்பட்டது. ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு அண்மையில் செய்யப்பட்டது. இதில் அக்டோபர் 16 ஆம் தேதி மாலை நிலவரப்படி அந்நிறுவன ஐபிஓகளில் 42 விழுக்காடு அளவுக்கு மட்டுமே சந்தா கிடைத்தது. இதுவரை 4.17கோடி பங்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.97 கோடி பங்குகள் விற்க திட்டமிடப்பட்ட நிலையில் 4.17 கோடி மட்டுமே விற்றது. ஆர் ஐஐ பிரிவில் 27,870 கோடி ரூபாய் பங்குகள் விற்க திட்டம் இருந்த நிலையில் 38 விழுக்காடு மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 26 விழுக்காடும், கியுஐபி பிரிவில் 58விழுக்காடும் சந்தா பெறப்பட்டன. அந்த நிறுவன பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் மட்டும் 1.31 மடங்கு அதிக சந்தாகளை பெற்றுள்ளது. திங்கட்கிழமை மட்டும் 8,315 கோடி ரூபாய் முதலீடுகளையும் ஈர்த்தது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1865முதல் 1960 ரூபாயாக இருந்தது. அக்டோபர் 17 ஆம் தேதியான வியாழக்கிழமைதான் இந்த ஐபிஓவுக்கு கடைசிநாளாகும். 14.2 கோடி பங்குகளை அந்நிறுவனம் மொத்தமாக விற்கிறது. தற்போது வரை ஹியூண்டாய் ஐபிஓவில் ஜிஎம்பி தொகை 35 ரூபாயாக உள்ளது. இந்திய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் வரும் 22 ஆம் தேதி ஹியூண்டாய் நிறுவன பங்குகள் பட்டியல் இடப்பட உள்ளன. அக்டோபர் 18 ஆம் தேதி ஐபிஓவில் புக் செய்தவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும். இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஹியூண்டாய் நிறுவனம் 13 வகையான மாடல் கார்களை உற்பத்தி செய்து வருகிறது.