சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரை சரிந்து 61 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்த சரிவு தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் பிரதிபலித்தது,65 புள்ளிகள் சரிந்த நிஃப்டி 18 ஆயிரத்து 344 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவிய இறங்குமுகம் தான் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெளிவான
விளக்கம் கிடைக்காததால் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தையிலும் பங்குகள் வீழ்ச்சியை கண்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக செயல்பட்டு பணத்தை மிச்சம்பிடிப்பதால் இந்தியாவில் முதலீடுகள் குறைந்துள்ளன. நிஃப்டியின் பொதுத்துறை வங்கிகள் குறியீடுதான் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தினசரி உபயோக பொருட்கள் துறையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை 0.9%, மருந்துத்துறை மற்றும் எண்ணெய் துறை பங்குகள் 0.39% மற்றும் பிற துறை பங்குகள் 0.15 முதல் 0.39% சரிவை சந்தித்துள்ளன டைட்டன்,டாடா மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவனம் 2% விலை ஏற்றம் கண்டுள்ளது. வார இறுதி நாள் வர்த்தக நாள் என்பதால் பங்குகளை அதிகம் விற்பதிலேயே முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.