உச்சம் தொட்டு சரிந்த இந்திய சந்தைகள்
செப்டம்பர் 18 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சம் தொட்ட நிலையில், பிற்பகலில் லேசான சரிவுடன் வர்த்தகம் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் சரிந்து 82,948 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி41 புள்ளிகள் குறைந்து 25,377புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தக தொடக்கத்தில் கணிசமாக ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டன. எனினும் இரண்டாவது பாதியில் அந்த லாபத்தை தக்க வைக்கமுடியாமல் கடைசி நேரத்தில் வணிகம் சிவப்பில் முடிந்தது. டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மகிந்திரா, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன. அதேநேரம் விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. ஆட்டோமொபைல், உலோகம், மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 0.5 முதல் 1 விழுக்காடு வரை சரிந்தன. செப்டம்பர்18ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 54ஆயிரத்து800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்த தங்கம் 6 ஆயிரத்து 850 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலைகிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 96 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.