“இந்தியர்கள் மின்சார வாகனங்கள் வாங்குங்க..”
நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் ஜி20 அமைப்பின் ஷெர்பாவாக திகழ்ந்தவர் அமிதாப் காந்த். இவர் படிம எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார கார்களை பயன்படுத்த கோட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் நடந்த கிரீன் பாரத் உச்சிமாநாட்டில் பேசிய அவர், தனது அலுவலக கார் டாடா நெக்சான்தான் என்றும், மகிந்திரா ஈவி காருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு இந்தியனும் வாங்க சக்தி இருந்தால் மின்சார கார்களை வாங்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மின்சார கார்கள் அந்த துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவன கார்கள் மின்சார கார்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு பல வாகனங்களை வாங்கும் போது அவை ஏன் மின்சார கார்களாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் 50 %மின்சார வாகனங்கள் உள்ளதாகவும் ஐரோப்பாவில் 10%, இந்தியாவில் வெறும் 2%மட்டுமே மின்சார வாகனங்கள் இருப்பதாகவும் அமிதாப் கூறியுள்ளார். 60%மின்சார வாகனங்களை இந்தியாவில் 2030க்குள் எட்ட வேண்டும் என்றும் 2035 ஆம் ஆண்டு 100 %மின்சார வாகனங்கள்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். தீர்க்கமான மற்றும் துரித நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு செய்தால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்றும் அமிதாப் காந்த் கூறியுள்ளார்.