புதிய மின்சார வாகன கொள்கை..
போக்ஸ்வாகன், ஹியூண்டாய், டொயோட்டா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய பிரிவு, இந்தியாவின் மின்சார வாகன கொள்கைகளுக்கு விண்ணப்பிக்க இருக்கின்றன. இந்த கொள்கையின்படி பல வெளிநாட்டு கார்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மின்சார கார்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான திட்டம் வரும் மார்ச்சில்தான் வெளியிடப்பட இருக்கிறது. புதிய மின்சார வாகன கொள்கையில் வெளியிடப்பட இருக்கும் அம்சங்களை வைத்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது கிட்டத் தட்ட உறுதியாகியுள்ளது. போக்ஸ்வாகன், ஹியூண்டாய், டொயோட்டா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்வது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. படிம எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது குறித்து அரசு தான் முடிவெடுக்க இருக்கிறது. புதிதாக வகுக்கப்படும் திட்டத்தின்படி, 35 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு அதிக வரியும், அதற்கும் குறைவான கார்களுக்கு 15 விழுக்காடு குறிப்பாக மின்சார கார்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 35,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார்கள் உற்பத்தி செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்த நிறுவனம் புதிய ஆலையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. ஹியூண்டாய், டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் புதிய திட்டத்தை வரவேற்றுள்ளன. டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் ஆலைகளை தொடங்க பணிகளை செய்து வருகின்றன. IFCI என்ற அமைப்பை உருவாக்கி உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தையும் அரசு கண்காணித்து வருகிறது. உள்ளூர் மதிப்பு கூட்டு விதிகள் குறித்து அண்மையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிதித்துறை பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.