இன்டஸ் இண்ட் வங்கி தலைமை செயல் அதிகாரி ராஜினாமா..
இன்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான சுமந்த் கத்பாலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை சிஇஓவாக இருந்த அருண் குரானா திங்கட்கிழமை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த நாளே சிஇஓவும் விலகியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
டெரிவேட்டிவ் தொடர்பான விவாதங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதற்கு முழு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வதாக கத்பாலியா குறிப்பிட்டுள்ளார். சுமந்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு தேவைப்படும் நிலையில் ஓராண்டு மட்டுமே அளிக்கப்பட்டதற்கு கத்பாலியா அதிருப்தி தெரிவித்திருந்தார். வணிக வங்கிகளுக்கான வகைப்படுத்தல் மற்றும் முதலீட்டு விதிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அந்த விதிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி அமலானது. டெரிவேட்டிவில் 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்டஸ்இண்ட் வங்கி முறைகேடு குறித்து கிரான்ட் தார்ன்டன் என்ற அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. 1959 கோடி ரூபாய் இழப்பை கிரான்ட் தார்ன்டன் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. வங்கித்துறையில் சுமந்த் கத்பாலியா, 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். சிட்டிவங்கி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஏபிஎன் அம்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் அவர் வேலை செய்துள்ளார். இன்டஸ் இண்ட் வங்கியில் கடந்த 12 ஆண்டுகளாக கத்பாலியா பணியாற்றியுள்ளார். பட்டயக்கணக்கரான அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்து கல்லூரியில் படித்தவராவார்.
