அமெரிக்காவில் நிலவுவது உண்மையில் பெரிய பிரச்சனையா?
அமெரிக்காவில் தற்போது பொருளாதார மந்தநிலையை போல ஒரு இக்கட்டான சூழல் நேரிட்டுள்ளது. வலுவான பொருளாதாரம் தற்போது இருந்தாலும் அமெரிக்க அரசு கடன் வாங்கும் விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு சாதாரண அமெரிக்க குடிமகன் செலுத்தும் வரியும், கடன் சுமையும் அதிகரித்துள்ளது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் அமெரிக்கர்கள் தலைகள் மீது அத்தனை கடன்கள் உள்ளன. தற்போது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் நீண்டகால அடிப்படையில் நிச்சயம் பெரிய பாதிப்பு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை 4 விழுக்காடாக இருக்கிறது. 2034 ஆம் ஆண்டுக்குள் ஜிடிபியின் அளவு 100 %-ல் இருந்து 122 %ஆக இருக்கும் என்பதே கணிப்பாக உள்ளது. பெருந்தொற்று காலகட்டத்துக்கு பிறகு பல்வேறு மீட்பு நடவடிக்கையாக பண உதவி அளிக்கப்பட்டதால்தான் தற்போது நிலைமை ஓரளவு சமாளிக்க முடிந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பானிலும் இதே நிலையாகத்தான் இருக்கிறது. ஜப்பானில் கடன் வாங்குவது உள்நாட்டிலேயே நடக்கும் என்ற நிலையில் அமெரிக்காவில் அப்படியல்ல. கடன்களை திறம்பட கையாண்டால் நீண்டகால பாதிப்புகளை கையாள முடியும் என்பதே நிபுணர்களின் அறிவுரையாக இருக்கிறது. வரிச்சுமை ஒரு பக்கம் இருந்தாலும் அமெரிக்காவில், அரசாங்கம் வாங்கியுள்ள கடன் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பது உண்மையிலேயே சிக்கலான விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள். தற்போதைய நிலை நீடித்தால் இந்தாண்டு பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற போதிலும், அடுத்தாண்டின் தொடக்கத்திலேயே நிச்சயம் மந்தநிலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.