இது உண்மையா? வாய்ப்பில்லையே!!!
இந்தியாவில் செல்போன் சந்தை தொடர்ந்து 3வது காலாண்டாக சரிந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான அளவில் இந்தியாவிற்கு செல்போன் இறக்குமதி குறைந்துள்ளது. ஜூலை -செப்டம்பர் காலகட்டத்தில் மட்டுமே இந்த சரிவு பதிவாகியுள்ளது. செல்போன்களை விட அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் முன்னுரிமை அளிப்பதாக கானலிஸ் என்ற நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன போன்களின் விற்பனை மட்டுமே 3 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், மற்ற அனைத்து ரக போன்களுக்கும் இந்திய சந்தையில் மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. இந்திய செல்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் 22 விழுக்காடாக உள்ளதாகவும்,ஷாவ்மி நிறுவன போன்களின் பங்குகள் 14 விழுக்காடாகவும் உள்ளன.
கடந்தாண்டை விட 9 விழுக்காடு செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்துள்ளதாக கூறியுள்ள ஆய்வு நிறுவனம், செல்போன்கள் விற்பனை கடந்த 3 காலாண்டுகளாக குறைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. சரியான விலையை நிர்ணயம் செய்யாமல் உள்ளதே இந்திய சந்தைகளில் விற்பனை குறைய காரணமாக ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் செல்போன்களுக்கான சந்தை குறைந்து வருகிறது என்பதை கேட்க ஆச்சரியமாக தான் இருக்கிறது.