வேலைக்கு ஆட்களை எடுப்பது 25விழுக்காடு உயரும்..
இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இருபது முதல் இருபத்து ஐந்து விழுக்காடு கூடுதலாக மாணவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, கிளவுடு கம்பியூட்டிங், டேட்டா அனலிடிக்ஸ் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உலகளாவிய மந்தநிலை சூழலால் அண்மையில் கேம்பஸில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது அதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் மென்பொருள் துறையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில் விப்ரோ வசம் தற்போதே 3 ஆயிரம் அடுத்த தலைமுறை டெக் பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம் மேலும் 12 ஆயிரம் பேர் வரை பணியில் சேர்க்க முயற்சிகளை செய்துவருகிறது. இதேபோல் டெக் மகிந்திரா நிறுவனமும் புதிதாக நான்காயிரம் பேரையும், டிசிஎஸ் நிறுவனம் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் அடுத்தகட்சமாக 20 ஆயிரம் பேருக்கு பணி தர தயாராக இருக்கிறது. புதுப்புது திறமைகள் கொண்டுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.