ஐடி சிஇஓகள் சம்பளம் உயர்வு..
இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்பளம் கடந்த 5 ஆண்டுகளில் 160 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளோரின் சம்பளம் வெறும் 4% மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியாவில் தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளவர்களின் சராசரி சம்பளம் 84 கோடி ரூபாயாக உள்து. துவக்க பணியாளர்கள் சம்பளம் 3.6லட்சத்தில் இருந்து 4லட்சம் என்ற அளவிலேயே இருக்கிறது. டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் இதே நிலைதான். தலைமை செயல் அதிகாரி நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் அதிக சம்பளத்தை கொட்டிக்கொடுக்கும் நிறுவனங்கள் பிரமிட்டில் அடிமட்டத்தில் இருப்பவர்களை ஏன் வஞ்சிக்கின்றனர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல் பணியில் சேர்வோர் முதல் தலைமை செயல் அதிகாரி வரையில் உள்ளவர்களுக்கான விகிதம் விப்ரோவில் அதிகம் உள்ளது. போதிய வரவேற்பு இல்லாமை, மற்றும் மந்த நிலை உள்ளிட்ட காரணிகளால் ஐடி நிறுவனங்களில் ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. ஒரு நிறுவனத்தில் புதிதாக சேர்வோருக்கு பயிற்சி தேவைப்படுவதால் அதற்கு அதிக செலவாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 15லட்சம் பொறியாளர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இந்தியாவில் 2021,2022-ல் அதிகம் பேரை வேலைக்கு எடுத்த ஐடி நிறுவனங்கள், கடந்தாண்டு மந்த நிலை ஏற்பட்டதால் அவர்களை வேலைக்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டது. பணவீக்கம், விலைவாசி ஏற்றம் வட்டி உயர்வு மற்றும் ஐடி நிறுவனங்களில் சமநிலையற்ற சம்பளம் ஆகியவை பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும், அதிக கடன் வட்டி விகிதங்களால் மக்கள் அவதிப்படுவதாகவும் உரிமைக்குரல்கள் எழுந்துள்ளன. விலைவாசி உயர்வை காரணம் காட்டி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் டெக் நிறுவன ஊழியர்கள் ஆதங்கத்தை முன்வைக்கின்றனர்.