கல்யாண் ஜூவல்லர்ஸ் Q2 அப்டேட்..
கேரள மாநிலம் திருச்சூரை பூர்விகமாக கொண்டது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை மற்றும் மார்ஜினில் சரிவு காணப்பட்டுள்ளது.
நிகர லாபத்தில் 3.3% ஆண்டுக்கு ஆண்டு குறைந்து செப்டம்பருடனான காலாண்டில் லாபம் 134.8 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு முறை பிடித்தமாக அந்நிறுவனத்துக்கு கடந்த காலாண்டில் சுங்க வரியாக 69 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 237%அதிகரித்து 6ஆயிரத்து 65 கோடி ரூபாயாக இருந்ததாக கூறப்படுகிறது. EBITDA மதிப்பு 4.3%உயர்ந்து 327.1 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 313.6 கோடி ரூபாயாக இருந்தது. மார்ஜின் சரிவு 170 அடிப்படை புள்ளிகள் குறைந்து 5.4% ஆக சரிந்துள்ளது. தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில் அதிகளவில் தங்கள் நிறுவனம் தங்கம் விற்பனை செய்துள்ளதாகவும், கல்யாண சீசனை ஒட்டி நிறைய பேர் தங்கத்தை வாங்கி வருவதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை நிலவரப்படி, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.90 % குறைந்து ஒரு பங்கு 676.85 ரூபாயாக உள்ளது. இந்தாண்டில் இதுவரை மட்டும் அந்த நிறுவன பங்குகள் 85 %ஏற்றம் கண்டுள்ளது.