பதஞ்சலியில் எல்ஐசி முதலீடு..

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்களை விற்று வரும் இந்த நிறுவனம், திறந்தவெளி சந்தையில் 2 விழுக்காடு வரை சமையல் எண்ணெயை விற்று வருகிறது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தைகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் பதஞ்சலி நிறுவனத்தின் 73 லட்சம் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளதாகவும். கடந்தாண்டு நவம்பர் 25 முதல் மார்ச் 4 ஆம் தேதிக்குள் இந்த வணிகம் நடந்ததாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே பதஞ்சலியில் 7 விழுக்காடு முதலீடுகளை வைத்துள்ள எல்ஐசி தற்போது அந்த அளவை 7.06%ஆக அதிகரித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் புரோமோட்டர்களிடம் 69.95% பங்குகள் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 13.3%, உள்ளூர் முதலீட்டாளர்களிடம் 6.3% முதலீடுகளை பெற்றுள்ளதுபதஞ்சலி நிறுவனம். மீதமுள்ள பங்குகள் 10.3% பொது பங்குதாரர்களிடம் உள்ளன. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 71% உயர்ந்து 371 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் செயல்பாட்டு வருவாய் 9,103 கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 57%அதிக லாபமாகும். கடந்த 2 ஆண்டுகளாக 923 ரூபாயாக இருந்த பங்குகளின் விலை தற்போது 1766 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஒரு பங்கின் அதிகபட்ச விலை ஆயிரத்து 992 ரூபாயாக இருந்தது.