உள்ளூர் முதலீட்டாளர்கள் பலே பலே..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு முறைகளை அறிவித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் ஒரு சாதக சூழல் நிலவியது. அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே உள்ள உள்ளூர் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி சந்தையில் 2லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1.4லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விற்றுத்தள்ளிய நிலையில், ஜனவரி மாதத்தில் 86,590 கோடி ரூபாயும், பிப்ரவரியில் 62,000 கோடி ரூபாயையும் உள்ளூர் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இதில் பெரும்பாலான முதலீடுகள் அதாவது 1லட்சம் கோடி ரூபாய் பரஸ்பர நிதியிலேயே இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் காப்பீட்டு நிறுவன முதலீடுகளாக 43000 கோடி ரூபாயும், புதிய பென்ஷன் திட்டத்தில் 8,820 கோடி ரூபாயாகவும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கித்துறை பங்குகள் 1,036 கோடி ரூபாய் இதுவரை விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ளூர் முதலீட்டாளர்கள், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியில் கவனம் செலுத்தி அதிகளவில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் முதலீட்டாளர்கள், நடுத்தரம் மற்றும் சிறிய முதலீட்டு பங்குகளில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புவதாகவும், தகவல் தொழில்நுட்பம், பார்மா, கிராமபுற திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிப்பதில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பெரிய பங்கு ஏற்பட்டுள்ளது.