டாடாவை மிஞ்சிய மஹிந்திரா..

நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனையில் டாடா மோட்டார்ஸை மஹிந்திரா நிறுவனம் மிஞ்சியுள்ளது. டாடா நிறுவனத்தின் மின்சார கார்களின் விற்பனை மந்தமான சரியான தருணத்தில் மஹிந்திரா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் வரை மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யுவி கார்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. இதில் தார் காரின் நவம்பர் மாத விற்பனை 13.14%ஆக உயர்ந்துள்ளது. டாடா நிறுவனத்தின் நெக்சான் ரக கார்களின் சந்தை பங்களிப்பு மார்ச் மாதத்தில் 14%ஆக இருந்த நிலையில் தற்போது அதன் மீதான மானியத்தை மத்திய அரசு குறைத்தால் மக்கள் இந்த ரக காரை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் கார் வைத்திருப்போரில் இரண்டரை விழுக்காடு மக்கள் மட்டுமே மின்சார கார்களை பயன்படுத்தி வருகின்றனர். டாடா நிறுவனம் முதலில் முன்னோடியாக இருந்தாலும் அக்டோபரில் எம்ஜி நிறுவனத்தின் வின்ட்சர் ஈவி கார்கள் அறிமுகமானதும் டாடாவின் ஆட்டம் அடங்கியது. அதேநேரம் தார் ரகத்தில் ராக்ஸ் ரக கார்கள் 1.7லட்சம் புக்கிங்களை பெற்றுள்ளது. இந்தியாவில் கூப் வகை கார்களை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை என்றும் அதே நேரம் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனம் 39.9 விழுக்காடு அளவுக்கு சந்தை மதிப்பை கொண்டுள்ள நிலையில் இரண்டாம் இடத்தை ஹியூண்டாய் மோட்டார்ஸ் பெற்றுள்ளது. ஹியூண்டாய் நிறுவனம் 13.7 விழுக்காடு பங்களிப்பை செய்துள்ளது. இந்த சூழலில் 3 ஆம் இடத்துக்கான போட்டி தொடர்ந்து டாடாவுக்கும் மகிந்திராவுக்கும் இருந்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களுமே தலா 13.1% பங்களிப்பை தருகின்றன. அடுத்தாண்டு பாதி வரை புதிய பெரிய கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தாமல் இருப்பதும் அந்நிறுவனத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. டாடாவின் அடுத்த கார்களில் சில ஐஸ் எனப்படும் படிம எரிபொருளில் இயங்கும் கார்களாக உள்ளதால் டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை மேலும் மந்தமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.