பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அடுத்த இலக்கு!!!
ஓஎன்ஜிசி விதேஷ் லிமிட்டட் நிறுவனமும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டடும் இணைந்து கென்யாவில் உள்ள துல்லோவ் ஆயில் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படையில் பிரிட்டன் நிறுவனமான துல்லோவ், ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் கிணறுகளை வைத்துள்ளது.
குறிப்பிட்ட இந்த நிறுவனம் லண்டன்,ஐயர்லாந்து,கானா பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உள்ளது.11 நாடுகளில் எண்ணெய் எடுப்பதற்கான லைசன்சையும் பெற்றுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா 85%பங்களிப்பை கொண்டுள்ளது.பிறநாடுகளை கையேந்தாமல் சொந்தமாக இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்ள இந்திய அரசு முடிவெடுத்துள்ளதன் வெளிப்பாடாகவே இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிக்க முடியாத சூழலில் உள்ளதாலும், ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொண்டதாலும் இந்தியா மிகத்தீவிரமாக எண்ணெய் வளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஓஎன்ஜிசியின் ஓவிஎல் நிறுவனம் கென்யாவில் மட்டுமில்லாமல் பிரேசிலில் இயற்கை எரிவாயு எடுக்கவும் அதிக தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பி இல்லாமல், மலிவான விலையில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக கொலம்பியாவில் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
அங்கோலா,அல்ஜீரியாவில் இருந்தும் கூட இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதிலும குறிப்பாக அல்ஜீரியாவில் இருந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.