கவலைப்படாத நிதியமைச்சர்..
அண்மையில் நடந்த பொருளாதார ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காரிஃப் பருவ விளைச்சலால் உணவுப்பொருட்கள் விலையேற்றம் கட்டுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாமல் ரிசர்வ் வங்கி தடுமாறி வருகிறது. உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு பல்வேறு உலகளாவிய விலையுயர்வு உள்ளிட்ட காரணிகள் இருந்தாலும் நவம்பர் மாத தொடக்கத்தில் விலை குறையும் என்றே நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமையல் எண்ணெய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கட்டுப்பட வாய்ப்புள்ளதாகவும், கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் பணவீக்கம் என்பது கடந்த அக்டோபரில், 14 மாதங்களில் இல்லாத அளவாக 6.21விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் வைத்துள்ளது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், அடுத்த ஆண்டில்தான் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் கடன் விகிதங்களால் கடன் வாங்க முடியாத சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் வரும் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே நேரம் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் அமெரிக்காவில் அமைய இருக்கும் புதிய அரசின் கொள்கைகளின் அடிப்படையில்தான் வணிகம் மற்றும் நிதி மூலதன செயல்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சில பொருட்களின் வரிகளை குறைத்தால் அது இருநாடுகளுக்கும் பலன்தரும் என்றும் மூத்த பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் 21 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருட்கள் கைமாறியுள்ளன. இது முதல் பாதி அளவு மட்டுமே, எனவே இந்தியாவுக்கு சாதகமாகவும், எதிராகவும் மாற அதிக வாய்ப்புகள் உள்ளன