Nvidia காட்டில் பணமழை

இருப்பதை இல்லாததாக்கவும், இல்லாததை இருப்பது போலவும் மாற்றி வரும் மந்திர தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு நுட்பம் பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழலில் பிரபல அமெரிக்க சிப் தயாரிக்கும் நிறுவனமான Nvidiaவின் லாபம் 3 மாதங்களில் 80 விழுக்காடு உயர்ந்துள்ளது. அண்மையில் சீன தயாரிப்பான டீப் சீக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி ஏஐ செயலி சந்தையை அசைத்துப்பார்த்தது. டீப்சீக் அறிமுகமான அந்த ஒரே நாளில் கடந்த மாதத்தில் NVIDIA நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்திருந்த நிலையில் , தற்போது அது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அந்நிறுவனத்தின் லாபம் மட்டும் 22.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்ததை விடவும் அதிகளவாக NVIDIA நிறுவனத்தின் காலாண்டு வருவாய் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. உலகின் முதல் மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிள் இருக்கும் நிலையில், இரண்டாவது பெரிய மதிப்பு மிக்க நிறுவனமாக NVIDIA மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தகவல் மையங்களில் அமேசான், மைக்ரோசாஃப்ட், ஆல்பபெட், மற்றும் மெட்டா நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். டேட்டா கேபிள்கள், சிப்கள், மற்றும் கணினிகள் விற்பனை மூலம் 93% கூடுதலாக நிறுவனத்துக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் என்விடியா நிறுவனம் கூறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிப்கள் உற்பத்திக்கு அதிபர் பைடன் கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறார். அமெரிக்க அதிபரின் முடிவை வைத்துத்தான் அடுத்தகட்ட நகர்வை மற்ற நாடுகளும் திட்டமிட்டுள்ளனர்.