வட்டி குறையுமா? சக்திகாந்ததாஸ் பதில் என்ன?
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரிசர்வ் வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், அமைச்சரின் கோரிக்கைக்கு தகுந்த பதில் அளித்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பணி குறித்து விளக்கம் அளித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக இருப்பதாக கூறிய அவர், ரிசர்வ் வங்கி அதிகமாகவும் வட்டியை குறைக்கவோ, கூட்டவோ முடியாது என்று தெரிவித்தார். டிசம்பர் மாதத்தின் நிதி கொள்கை கூட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய சக்திகாந்ததாஸ்,வட்டி விகிதம் குறைப்பு பற்றி தற்போது பேச முடியாது என்றார். கடந்த அக்டோபரில் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில் பேசிய சக்திகாந்ததாஸ், ரிசர்வ்வங்கி வழங்கும் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5%ஆகவே தொடரும் என்று தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி, தனது கடன் விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் விலைவாசி உயர்வு ரிசர்வ்வங்கியின் தாங்கிக்கொள்ளும் அளவை கடந்து 6.2% ஆக அதிகரித்தது. வரும் டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் கட்டுப்படும் என்றுமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.