வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு கூட பணம் தர முடியாமல் உள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை சேவைக்கட்டணமாக வோடபோன் அளிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பணத்தை அளிக்காவிட்டால் சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் பணத்தை அளிக்க உள்ளது பற்றி இன்டஸ் டவர்ஸ் நிர்வாகத்தினரிடம் வோடபோன் நிறுவனம் சமரச பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டது. இதனையடுத்து விரைவில் பண பாக்கி பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகையில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பணம் வோடபோன் நிறுவனம் மட்டும் தரவேண்டியுள்ளதால் அதிக லாபம் ஈட்டியும் நிதி இல்லாமல் இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் தவிக்கிறது.
விரைவில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படலாம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.