ரிலையன்ஸ் போனஸ் பங்கு தேதி வெளியீடு..
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அண்மையில், ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டன. இது ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஆனந்தமான செய்தியாக இருந்தது. எனினும் எந்த தேதிக்கு முன்பு வாங்கிய பங்குக்கு போனஸ் தரப்படும் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ரெக்கார்டு தேதி விவரங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 28 ஆம் தேதிதான் ரெக்கார்ட் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 28 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த போனஸ் பங்குகள் குறித்து முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். போனஸ் பங்கு அளிப்பது குறித்து பங்குதாரர்களிடம் நடத்திய வாக்கெடுப்பில் 99.92 விழுக்காடு பேர் போனஸ் பங்குகளை அளிக்கலாம் என்று வாக்களித்தனர்.
ரிலையன்ஸின் பங்கு மூலதனம் என்பது தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 4900 கோடி ஈக்விட்டி பங்குகள் உள்ளன. ஒவ்வொன்றின் ஈக்விட்டி பங்கு மதிப்பு 10 ரூபாயாகவும், 100 கோடி முன்னுரிமை பங்குகளுக்கு தலா 10 ரூபாய் மதிப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 35 லட்சம் பங்குதாரர்கள் ஏற்கனவே ரிலையன்ஸில் பங்குகளை வைத்திருந்தனர். இந்த அறிவிப்பின் மூலம் அவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஈட்டுக்கு ஈடாக 35லட்சம் பங்குகள் கிடைக்கும். ஆயிரம் பங்குகள் வைத்திருந்த பங்குதாரருக்கு இனி 2000 பங்குகள் கிடைக்கும். 1980, 1983, 1997, 2009, 2017 ஆகிய 5 முறை இதற்கு முன்பாக ரிலையன்ஸ் நிறுவனம் போன்ஸ் பங்குகளை அளித்தது குறிப்பிடத்தக்கது.