சிங்கப்பூரில் சம்பள உயர்வு
வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நபர்களின் சம்பளத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய சம்பளம் வரும் ஆண்டு முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 5600 சிங்கப்பூர் டாலர்கள் ஒரு மாத குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வரை 5,000 டாலர்களாக உள்ளது. நிதித்துறையில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக 6,200 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது 5 ஆயிரத்து 500 டாலர்களாக உள்ளது. வெளிநாட்டினர் சிங்கப்பூருக்கு வந்தால் உயர்தர வாழ்க்கைத் தரத்தை தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்கள் வருகை அதிகரிக்கும் அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் வேலைகளுக்கு போட்டி அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. கடந்தாண்டு ஜூன் வரையிலான தரவுகளின்படி சிங்கப்பூரில் 1,97,300 வெளிநாட்டினர் பணியில் உள்ளது தெரியவந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் வேலைக்கான பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 59 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு முன்பு வரை 4,500 சிங்கப்பூர் டாலர்களாக இருந்த தொகை தற்போது 5,000 சிங்கப்பூர் டாலர்களாக உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் முதல் புதிய சம்பளம் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.