செபி விடுத்த எச்சரிக்கை..

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலீட்டாளர்களை செபி இந்தாண்டு எச்சரிப்பது இது மூன்றாவது முறையாகும். கொஞ்சம் பணம் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று பல சமூக வலைதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள செபி, முதலீட்டாளர்களை பாதுகாப்பே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளது. சில இணையதளங்கள் பங்குச்சந்தைகளை வைத்து சூதாட்டம் கூட நடத்தி வருகின்றன. இதனால் பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே முதலீடுகளை செய்ய வேண்டும் என்றும் செபி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கூட செபி முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்திய முதலீட்டாளர்களுக்கே அளிப்பதாக ஒரு விளம்பரம் வெளியானதை செபி சுட்டிக்காட்டி இருந்தது. இது போன்ற போலியான நபர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் , அனைத்து முதலீட்டாளர்களும் டீமாட் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும் என்றும் செபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மோசடி நபர்களிடம் செல்போன் எண் மற்றும் ஓடிபி சொன்னால், பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் செபி சுட்டிக்காட்டியது. இது போன்ற மோசடிகளில் சிக்கினால் பணம் திரும்ப வராது என்பதையும் செபி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.