6 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு..
இந்திய பங்குச்சந்தைகள் 5 ஆவது நாளாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் பெரியளவு சரிவு தொடர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மீண்டும் சரிவு நீடித்தது. மும்பை பஙகுச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 984 புள்ளிகள் சரிந்து 77 ஆயிரத்து 690 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் குறைந்து 23,559 புள்ளிகளில் நிறைவடைந்தது. பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, இந்துஸ்தான் யுனிலிவர் , ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. ஆட்டோமொபைல், வங்கி, உலோகம் , பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2முதல் 3 விழுக்காடு வரை சரிவை கண்டன. அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. பல நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மோசமாக இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்படுகிறது. நவம்பர் 13 ஆம் தேதியான புதன்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை 320 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 45 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 101 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், ஜிஎஸ்டி நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.