திருப்பூரில் டைலர்களுக்கு பரிசு அறிவிப்பு..
திருப்பூரில் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் குவிந்து வந்தாலும் போதுமான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திறமையான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிப்பை தடுக்கும் நோக்கில் அதிகநேரம் உழைக்கும் டைலர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் அளிப்பதாக நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் 8 லட்சம் பேர் நேரடியாக திருப்பூரில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதில் 3 லட்சம் பேர் வடமாநிலத்தவர். பிச்சம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10லட்சம் துணிகள் ஏற்றுமதி செய்யப்படகிறது. அந்த நிறுவனத்தில் டைலர்கள் பற்றாக்குறை இருக்கிறது. திறமையான டைலர்களுக்கு போதுமான சம்பளம் தரப்படாததால், 2 நாளைக்கு ஒரு நிறுவனத்துக்கு டைலர்கள் மாறிக்கொண்டே இருப்பதாக அந்நிறுவனம் வேதனை தெரிவிக்கிறது. 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் அளிப்பதாக கூறியதும் ஏராளமானோர் தங்கள் நிறுவனத்தை நாடுவதாகவும் அந்நிறுவன மனிதவள பிரிவு பணியாளர் மணி கூறியுள்ளார். 8 மணிநேரம் வேலை பார்க்கும் ஒரு டைலருக்கு தற்போது 490 ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுகிறது. ஆனால் டைலர்கள் ஒரு பீசுக்கு பணம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். எங்கு அதிக சம்பளம் தருகிறார்களோ அங்கு டைலர்கள் சென்று விடுகின்றனர். எனவே அவர்கள் நிரந்தர வேலை குறித்து கவலைப்படவில்லை. திருப்பூரில் மட்டும் 30 விழுக்காடு அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறதாம். இந்த விவகாரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவும் கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு இந்த வகை பயிற்சியை அளிக்க மாநில அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாநில அரசு பயிற்சி அளித்தால் திறமையான பணியாளர்கள் தங்களுக்கு கிடைப்பார்கள் என்று திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்