11 பில்லியன் டாலர் ஐபிஓவை குறிவைக்கும் டாடா கேபிடல்..

டாடா குழுமத்தில் நிதிப்பிரிவில் இயங்கி வரும் டாடா கேபிடல் நிறுவனம் இந்தாண்டின் மிகப்பெரிய ஐபிஓவாக 11 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் நிச்சயமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலிக்கும் என்று கூறும் நிபுணர்கள்,கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்யலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இன்னும் டாடா குழுமம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. கடந்த வாரம் டாடா கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 230 மில்லியன் பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டது. 15.04 பில்லியன் ரூபாய் அளவுக்கான உரிமத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஐபிஓ சந்தைகள் பெரிய சரிவை கண்டு வரும் நிலையில் இந்தாண்டு எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ், புரொடென்சியல் பிஎல்சி ஆகிய நிறுவனங்கள் முறையே 1.5 பில்லியன் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட முடிவெடுத்துள்ளது. கடந்தாண்டு ஹியூண்டாய் மோட்டார்ஸ் இந்திய நிறுவனம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிதியை திரட்டியதே இந்தியாவில் அதிகபட்ச தொகையாகும். டாடா கேபிடல் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 900 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.