தொடர்ந்து அசத்தும் டாடா நிறுவனம்..
அதிக வரி, போதுமான வரவேற்பு இல்லாமல் தடுமாற்றம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி Ford நிறுவனம் இந்தியாவில் இருந்து கடந்தாண்டு ஓட்டம்பிடித்தது. இந்நிலையில் அந்த நிறுவனம் பயன்படுத்தி வந்த ஆலையை டாடா நிறுவனம் 725.70 கோடி ரூபாய்க்கு பணம் கொடுத்து கைப்பற்றியது. குறிப்பாக குஜராத்தின் சனாந்த் என்ற பகுதியில் உள்ளள கார் உற்பத்தி ஆலையில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் அசுர வேகத்தில் நடந்து வந்தன. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஃபோர்ட் நிறுவன ஆலையில் இருந்து உருவாக்கப்பட்ட முதல் டாடா கார் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 12 மாதங்களிலேயே ஒரு ஆலையை கையகப்படுத்தி, அதில் தேவையான மாற்றங்களை செய்து புதிதாக வேறொரு நிறுவன பொருளை உற்பத்தி செய்து டாடா நிறுவனம் மிரள வைத்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் விட்டுச்சென்ற ஆலையை டாடா நிறுவனம் வாங்கியிருப்பதால், புதிய ஆலையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. 460 ஏக்கர் நிலமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் கார் உற்பத்தி செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த புதிய ஆலையில், வழக்கமான கார்கள் மற்றும் மின்சார கார்கள் என இரண்டையும் உற்பத்தி செய்து வருகிறது டாடா நிறுவனம். குஜராத்தில் புதிய ஆலையில் ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர், டாடா நிறுவனத்துக்கு இந்த ஆலையில் மேலும் ஆயிரம் பணியாளர்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் தேவைப்படுகின்றனர். ஆலையை விட்டுச்சென்றாலும் சில அத்தியாவசிய உற்பத்தி பணிகளை ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் பல பகுதிகளில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.