TCS எதிர்கால வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பிரதானமாக கருதுகிறது
இந்திய மென்பொருள் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதன் எதிர்கால வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பிரதானமாக கருதுகிறது என அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக, தொழில்நுட்ப மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் தேவைகள், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் ஆகிய சவால்களை எதிர்கொண்டாலும், TCS தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம், எதிர்காலத்திற்குத் தயாரான மூன்று தூண்களைக் கொண்ட வியூகம்.
அவை: AI-ஐ அதிகளவில் பயன்படுத்துதல், வாடிக்கையாளர்களுக்கு அருகில் கண்டுபிடிப்புகளை கொண்டு செல்லுதல், நாளைய திறன்களுக்கு ஊழியர்களை தயார்படுத்துதல்.
AI குறித்து, TCS நிறுவனம் உலகெங்கிலும் ஆய்வு மையங்களை நிறுவி உள்ளது.
வாடிக்கையாளர்களுடன் இணைந்து தீர்வுகளை உருவாக்கும் இந்த மையங்கள், பல்வேறு துறைகளுக்குத் தேவையான AI தீர்வுகளை விரைவாக வடிவமைத்து செயல்படுத்துகின்றன.
ஊழியர்களின் திறமையை மேம்படுத்த, ‘tcsAI’ என்ற ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது அனைத்து ஊழியர்களுக்கும் AI தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. டெவலப்பர் கருவிகள் முதல் AI பயன்பாடுகள் வரை, ஒவ்வொரு ஊழியரும் AI-ஐ திறம்பட பயன்படுத்த இது உதவுகிறது.
NVIDIA, மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் TCS கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு, உற்பத்தி, நிதி சேவை போன்ற துறைகளுக்குத் தேவையான AI தீர்வுகளை உருவாக்குகிறது.
விலைவாசி உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்புகள் போன்ற சவால்கள் இருந்தாலும், நிறுவனம் தனது லாபத்தை நிலையாகப் பராமரித்து வருகிறது. இதற்கு காரணம் செயல்பாட்டுத் திறனில் நிறுவனம் காட்டி வரும் ஒழுக்கம். வாடிக்கையாளரின் தேவைகளை துல்லியமாக நிறைவேற்றுவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
சவால்களுக்கு மத்தியில், TCS வலுவான நிதி பலத்துடன் செயல்படுகிறது. இது AI, கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற அதிக வளர்ச்சி உள்ள துறைகளில் முதலீடு செய்ய உதவுகிறது.
சிங்கப்பூர், மெக்சிகோ, ஐரோப்பா போன்ற இடங்களில் புதிய கண்டுபிடிப்பு மையங்களை நிறுவி, வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவாக வழங்குகிறது.
கிளவுட் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, தற்சார்பு இந்தியாவுக்கு துணைபுரியும் வகையில் செமிகண்டக்டர் சிப்புகள் வடிவமைப்பது, குவாண்டம் கம்ப்யூட்டிங் மையத்தை உருவாக்குவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
