டெஸ்லாவுக்கு வந்த சோதனை..
உலகளவில் பிரபலமாக உள்ள மின்சார கார் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இந்த காரை கடந்த 2016 ஆம் ஆண்டே இந்தியாவில் விற்க முயற்சிகள் நடந்துள்ளன. டெஸ்லா மாடல் 3 ரக காரை முன்பதிவு செய்ய ஆயிரம் அமெரிக்க டாலர்களை டெஸ்லா நிறுவனம் கேட்டிருந்தது. இந்தியாவில் சிலரும் ஆரவமாக அதை முன்பதிவு செய்திருந்தனர். வருடங்கள் 8 கடந்துவிட்ட நிலையில் இதுவரை காரும் வரவில்லை, கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை. எனவே கொடுத்த பணத்தை உடனே திருப்பித் தர வேண்டும் என்று முன்பதிவு செய்தவர்கள் கொதித்து எழுந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த விஷால் கோண்டால் என்பவரும் இப்படி முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்தார். 6 வருடங்களாக காத்திருந்த விஷால் ஜெர்மனியைச் சேர்ந்த கார் நிறுவனமான ஆடியில் மின்சார காரை வாங்கிவிட்டார். சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக கார்கள் விற்கும் 3 ஆவது நாடாக இந்தியா உள்ளது. மும்பையைச் சேர்ந்த மற்றொருவரான ஹேமந்த் என்பவரும் கடந்த 2016-ல் டெஸ்லாவுக்கு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்தார். அவரும் நிதானம் இழந்து கடைசியில் கடந்தாண்டே பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உள்ளூர் மின்சார கார்களும், சில வெளிநாட்டு நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறப்பதால் டெஸ்லாவின் தேவை குறைந்துள்ளது என்பதே நிதர்சனம். கடந்த ஏப்ரலில் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வந்து கார் தயாரிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.