மீண்டும் வந்த ஆப்களால் சோதனை..,
பணப்பரிவர்த்தனை தொடர்பான செயலிகளில் கூகுள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இன்னும் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கூகுளுக்கு அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பேமண்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமும் அரசும் சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த கவுன்சிலில் அனைத்து முன்னணி பேமண்ட் நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை பின்பற்ற ஏதுவாக மத்திய அரசு தலையிட்டு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பேமண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதே பாணியில் தென்கொரியாவில் ஏற்கனவே ஒரு தொலைத் தொடர்பு சட்டம் கடந்த 2022-ல் அமல்படுத்தியிருக்கிறது. புதிய சட்டத் திருத்தத்தால் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அந்நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள கூகுளின் கொள்கைகளை இன்னும் விரிவுபடுத்த பல்வேறு நிறுவனங்கள் கோரியுள்ளன. நிறுவனங்கள் கூகுள் ஆண்டிராய்டில் வைத்திருந்த செயலியில் பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும் வகையில் கூகுள் சில செயலிகளை பட்டியலில் இருந்து தூக்கியது. இதற்கு பல நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. பினனர் கூகுள் பிளே ஸ்டோரில் பழையபடி செயலிகள் இயங்கத் தொடங்கின. எனினும் கடந்த மார்ச் 1 முதல் நிறுவனங்கள் கூகுளுக்கு செலுத்த வேண்டிய தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 10 பெரிய நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்து வருகின்றன. ஏற்கனவே கூகுள் மீது புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கும் இதே நிலையில் அதிக பணம் கேட்டு தொல்லை செய்வதாக கூகுள் நிறுவனத்தின் மீது பல்வேறு நிறுவனங்கள் புகார் தெரிவித்து வருவதால் இந்திய அரசுக்கும் கூகுளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டிஜிட்டல் பேமண்ட்டை பயன்படுத்த எந்த கட்டணமும் இல்லாமல் யூபிஐ சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது இதுவே பல்வேறு நிறுவனங்களுக்கு சிக்கலாக இருக்கிறது. இந்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரை கூகுள் நிறுவன அதிகாரிகள் சந்திக்க இருக்கும் நிலையில் நீக்கப்பட்ட செயலிகள் மீண்டும் கூகுள் சந்தையில் வந்திருப்பது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.