வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சி..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் மோசமான அளவாக 85ரூபாய் 07 காசுகளாக வீழ்ச்சியை கண்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிகரிக்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைத்து வருகிறது. வரும் ஆண்டுகளிலும் குறைப்பு நடவடிக்கை தொடரும் என்று தகவல் வெளியானதால் அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்தது. இந்தாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.20 % சரிந்துள்ளது. அமெரிக்க உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, கடன்கள்மீதான வட்டி விகிதத்தை கால்விழுக்காடு குறைத்துள்ளது. இதனால் கடன்வட்டி விகிதம் 4.25 முதல் 4.5%ஆக சரிந்துள்ளது. இந்த அளவு என்பது டிசம்பர் 2022 காலகட்டத்துக்கு பிறகு தற்போதுதான் குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் கடன்களின் வட்டி விகிதம் குறைப்பை கவனமாக கையாளப்போவதாக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுப்பது, டாலர் வலுவடைவது உள்ளிட்ட காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. சீனாவின் யுவானும் சரிந்து வருவதால் அதன் எதிரொலியாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தியாவின் வெளிநாட்டுப் பண கையிருப்பு என்பது 654 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்த அக்டோபரில் 704 பில்லியன் டாலராக இருந்தது. அடுத்தாண்டு டிரம்ப் பதவியேற்றால் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால், வெளிநாட்டு பண கையிருப்பை பாதுகாப்பாக அதிகரிக்கும் முயற்சிகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.