திவாலாகிறது டப்பர்வேர் நிறுவனம்..
காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ் தயாரிப்பதில் தனித்துவம் கொண்ட அமெரிக்க நிறுவனம் டப்பர்வேர். 75 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த 2020 முதல் பெரிய சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் கடுமையான நிதி நெருக்கடியால் தவிக்கும் டப்பர்வேர் நிறுவனம், டெலவேரில் உள்ள நீதிமன்றத்தை நாடி, தங்கள் நிறுவனம் திவாலானதாக அறிவித்துள்ளது. முதலீடு செய்ய பலரும் முன்வந்த போதும் டப்பர்வேர் நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரியளவில் மக்களிடம் வாங்க ஆர்வம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டப்பர்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. திவாலாவது குறித்து நீதிமன்றத்தில் அந்நிறுவனம் அறிவித்த நிலையில், நியூயார்க் நகர பங்குச்சந்தையில் டப்பர் வேர் நிறுவன பங்குகள் டப்பா டான்ஸ் ஆடின. கிட்டத்தட்ட 50% மதிப்பு ஒரே நாளில் சரிந்தது. 700மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அந்நிறுவனம் தடுமாறி வருகிறது. 150 ஊழியர்களை கடந்த ஜூன் மாதம் வேலையை விட்டு நீக்கிய அந்நிறுவனம், அமெரிக்க ஆலையை மூடியது. 1946 ஆம் ஆண்டு ஏர்டைட் டப்பாவை அதன் நிறுவனர் எர்ல் டப்பர் கண்டுபிடித்ததால் அந்த நிறுவனம் அன்று முதல் பிளாஸ்டிக் டப்பாக்களை விற்று வந்தது. 2022-ல் மட்டும் டப்பர்வேர் டப்பாக்களை விற்பனை செய்வதறாக 3லட்சம் விற்பனை பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.