யூகோ வங்கி ஐஎம்பிஎஸ் மோசடி-67 இடங்களில் சோதனை..
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 820 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்த பரிவர்த்தனையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. ராஜஸ்தானில் ஜோத்பூர், ஜெய்ப்பூர், ஜலோர், நகாவுர், பார்மர் , பலோதி, புனேவிலும் இதே அமைப்பு சோதனையை தீவிரப்படுத்தியது. இந்த சோதனையின்போது 130 ஆவணங்கள் சிக்கின. அதில் குறிப்பாக யூகோ வங்கி மற்றும் ஐடிஎப்சி வங்கிகள் தொடர்பான ஆவணங்களும் இடம்பிடித்துள்ளன. 40 செல்போன்கள், 2 ஹார்டு டிஸ்குகள், 1 இண்டர்நெட் டாங்கில் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவை தடையவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 30 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக இதே பரிவர்த்தனையில் 13 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. கடந்தாண்டு நவம்பரில் யூகோ வங்கியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையை தொடங்கியிருக்கிறது. கடந்த நவம்பர் 10,11 தேதிகளில் 7 தனியார் வங்கிகளில் 14,600 வங்கிக்கணக்களில் இருந்து 41,000பேருக்கு தவறுதலாக பணம் வந்துள்ளது இது தொடர்பாகவே சோதனை நடைபெற்றது. இந்த பணம் வந்ததும் கிடைத்தவரை லாபம் என்று சிலர் எடுத்து செலுவு செய்துவிட்டனர். இது தொடர்பாக கடந்த டிசம்பரில் 13 இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தியது. கொல்கத்தா மற்றும் மங்களூருவில் உள்ள வங்கி அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.