5 லட்சம் ரூபாய் வரைக்கும் யுபிஐ…
இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வரிசெலுத்துவோர் யுபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வரம்பு அளவு 1 லட்சம் ரூபாயாக இருந்தது. இது தொடர்பாக என்பிசிஐ ஏற்கனவே இந்தாண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில் யுபிஐ மூலம் பணம் அனுப்புவது மிகவும் எளிதாகவும், மக்களுக்கு விரும்பத் தக்க அம்சமாகவும் இருக்கிறது. புதிய விதியின்படி, யுபிஐ மூலம் வரிகளை ஒரே பரிவர்த்தனையில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஐபிஓகள், ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடி திட்டங்களுக்கும் இனி யுபிஐ மூலம் ஒரே முயற்சியில் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட வியாபாரி வெரிஃபைடாக இருத்தல் வேண்டும். உயர்த்தப்பட்ட அளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக அலஹாபாத் வங்கியின் தற்போதைய அளவு 25,000 ரூபாயாகவும், எச்டிஎப்சி , ஐசிஐசிஐ வங்கிகள் பியர் டு பியர் பரிவர்த்தனைகளில் 1லட்சம் ரூபாய் வரை வசதி இருந்தது. வரி செலுத்துவதை முறைப்படுத்தும் வகையில் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆக்கபூர்வமான வகையில் டிஜிட்டல் பேமண்ட்களை செய்ய இந்த புதிய அம்சம் உதவும் என்று நம்பப்படுகிறது.