அமெரிக்காவிலும் அடிவாங்கிய பங்குச்சந்தைகள்..

அமெரிக்க அரசு பரஸ்பர வரி விதிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தையில் 1,626புள்ளிகள் வரை வீழ்ச்சி காணப்பட்டது. எஸ்அன்ட்பி500 பங்குச்சந்தைகளில் 229 புள்ளிகள் சரிவு காணப்பட்டது. இதேபோல் டெக் நிறுவன பங்குகளான நாஸ்டாக்கில் 773 புள்ளிகள் சரிவு காணப்படுகிறது. பரஸ்பர வரி விதிப்புக்கு 90 நாட்கள் தடை விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் பரிசீலிப்பதாக தகவல் வெளியானதும் உயர்ந்த பங்குச்சந்தைகள், அது பொய் என தெரிந்ததும் மீண்டும் உடைந்து விழுந்தன. கடந்த டிசம்பரில் உச்சம் பெற்றிருந்த புளூ சிப் டவ் பங்குகள் 17 விழுக்காடு வரை சரிந்துள்ளன. அமெரிக்காவின் முக்கியமான மூன்று பங்குச்சந்தைகளிலும் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் சரிவு காணப்பட்டது. உலகநாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கலந்து ஆலோசிக்க அமெரிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் விலையும் 12.3விழுக்காடும், மாரா ஹோல்டிங்க்ஸ் 7.8விழுக்காடும் சரிவை கண்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக மந்தநிலை வந்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.