வின்ஃபாஸ்ட், இந்தியாவில் தனது முதல் இரண்டு கார்களை அறிமுகம் செய்துள்ளது
வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் தனது முதல் இரண்டு கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி ஃபாம் சான் சௌ, இந்தியாவின் மின்சார வாகனக் கொள்கை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “கொள்கை உருவாக்கும் வேகம், தொழில் நிறுவனங்களின் வேகத்துடன் ஒத்துப் போவதில்லை. நாங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது மின்சார வாகன முதலீட்டுக் கொள்கை வரைவு செய்யப்பட்டது.
ஆனால், எங்கள் தொழிற்சாலையில் இருந்து கார்கள் வெளியே வரத் தொடங்கிய பிறகே, அந்த கொள்கை அமலுக்கு வந்துள்ளது” என்று வருத்தம் தெரிவித்தார்.
இந்தியாவின் மின்சார பயணிகளுக்கான கார்கள் உற்பத்தி திட்டம் கடந்த மார்ச் 2024 இல் அறிவிக்கப்பட்டாலும், அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஜூன் 2, 2025 அன்று, அதாவது ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளன. இந்த காலதாமதமே நிறுவனங்களின் வேகத்திற்கும் கொள்கை உருவாக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது என சௌ சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், “புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவே இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்துவிட்டோம். அதனால் இந்தக் கொள்கை எங்களுக்கு பொருந்தாது. இது குறித்து நானும் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள முதலீடுகளையும் இந்தக் கொள்கையில் கருத்தில் கொள்ள வேண்டும். அல்லது ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்ய ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
புதிய திட்டத்தின்படி, குறைந்தபட்சம் ₹4,150 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்கள், இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 15% குறைந்த சுங்க வரியை பெறலாம். இந்தக் கார்களின் குறைந்தபட்ச விலை $35,000 ஆக இருக்க வேண்டும்.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் VF6, VF7 ஆகிய இரண்டு மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. VF6 காரின் விலை ₹16.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும், VF7 காரின் விலை ₹20.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், கொள்கை ரீதியான சலுகைகள் அவர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
