1.1பில்லியன் அமெரிக்க டாலர் தானமாக கொடுத்த வாரன் பஃப்பெட்

உலகின் மூத்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், சில தொண்டு நிறுவனங்களுக்கு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை வழங்கியுள்ளார். 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள நன்கொடைகளை அளிக்க, அவர் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருந்தார். 94 வயதான வாரன், பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அவர் தனது பங்குதாரர்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தாம் மறைந்தால் தமக்கு பிறகு தனது செல்வங்களை யாருக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 1600 கிளாஸ் ஏ பங்குகளை 24லட்சம் பி கிளாஸ் பங்குகளாக மாற்றவும், தனது குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு மாற்றவும் அதில் குறிப்பிட்டுள்ளார். தாம் ஏற்கனவே ஒபம்புக்கொண்டபடி, 57 விழுக்காடு அளவுக்கு பங்குகளை பெர்க்ஷைர் ஷேர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நற்காரியங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. உருக்கமாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தந்தை அந்தஸ்தில் இருந்து எழுதுவதாக கூறியுள்ளார். தனது முதல் மனைவி சூசி காலமானது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள வாரன். தனக்கு பிறகு தனது மனைவி சொத்துகளை நிர்வகிப்பார் என்று நினைத்த நிலையில், நிலைமை மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அளித்துள்ளார் வாரன். தனது மறைவுக்கு பிறகு 3 குழந்தைகளுக்கும் சமமான அளவு பங்குகளை பிரித்துக்கொடுத்துவிட்டதாகவும், தனது பிள்ளைகளே பெரிய சொத்து என்றும் கூறியுள்ளார். உங்கள் பிள்ளைகளிடம் சொத்துகள் குறித்த திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும் என்றும். குழந்தைகளுக்கு அவர்களுக்கான பொறுப்புகள் குறித்து தயார்படுத்த வேண்டும் என்றும் வாரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.