இதில் தான் உயர்ந்து இருக்கிறோம்!!!
உலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக உடைத்த அரிசி எனப்படும் நொய் மற்றும் அரிசி ஏற்றுமதி செய்தால் 20 விழுக்காடு கூடுதல் வரி உள்ளிட்டவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நடப்பாண்டு 52 மில்லியன் டன் அளவுக்கு அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது. இந்த அளவு கடந்தாண்டை விட 1 புள்ளி 6 விழுக்காடு அதிகமாகும். இத்தனை கட்டுப்பாடுகள் விதித்தும் இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இன்னும் கூட அதிக கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய விலையை விட இன்னும் கூட 5 விழுக்காடு அரிசி விலை உயரும் என்றும் நோமூரா என்ற ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதன் தாக்கம் நாட்டின் மொத்த சில்லறை பணவீக்கத்தில் பூஜ்ஜியம் புள்ளி 2 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் சில பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக அரிசி உற்பத்தி வழக்கத்தைவிட 6 முதல் 7 மில்லியன் டன் குறைந்துள்ள சூழலில், உள்நாட்டில் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.