ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையின் நம்பிக்கை நாயகன்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல் என்றும் அறியப்படும் அவரது சொத்தின் நிகர மதிப்பு $5.8 பில்லியன்.
பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், ஜுன்ஜுன்வாலா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அக்டோபர் 2021 இல், அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, ஜுன்ஜுன்வாலா ஒரு கசங்கிய வெள்ளைச் சட்டை அணிந்திருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
அவரது மரணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு நிறைந்த அவர், நிதி உலகில் அழியாத பங்களிப்பை விட்டுச் செல்கிறார். அவர் இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்
ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் படிக்கும்போதே வெறும் ₹5,000 மூலதனத்துடன் பங்குச் சந்தைகளில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
அவர் சமீபத்தில் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே மற்றும் முன்னாள் இண்டிகோ தலைவர் ஆதித்யா கோஷ் ஆகியோருடன் இணைந்து ஆகாசா ஏர் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.