மீண்டும் உயரும் தங்கம்..
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான சண்டை நிறுத்தம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிந்திருந்தது. இந்நிலையில் ஸ்பாட் தங்கத்தின் மதிப்பு 0.3விழுக்காடு உயர்ந்து ஒரு அவுன்ஸ் 2633 அமெரிக்க டாலர்களாக வணிகமானது. இதேபோல் அமெரிக்க தங்க வருங்கால திட்டத்தின் மதிப்பு 0.6 விழுக்காடு உயர்ந்து 2634 டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல்-லெபனான் போரை நிறுத்த அவர் முயற்சி மேற்கொண்டார், இதன் காரணமாக தங்கம் விலையில் சரிவு காணப்ட்டது. அதே நேரம் அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா,மெக்சிகோ, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு வரியை ஏற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இது மட்டுமின்றி அமெரிக்க வேலைவாய்ப்புத்தகவல்கள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்டவற்றின் முடிவுகளின் அடிப்படையில் தங்கம் விலையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.