பெரிதாக வீழ்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு..
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தததை அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 84 ரூபாய் 60 காசுகளாக குறைந்துள்ளது. 3 ஆவது காலாண்டில் மிகப்பெரிய அளவு சரிவை சந்தித்த இந்திய உள்நாட்டு உற்பத்தியால் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை விற்றுள்ளனர். இதே நிதி கடந்த அக்டோபரில் 11 பில்லியன் வெளியேறியது. ஏற்கனவே இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் ஜிடிபி சரிவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிகளை கொண்டுவந்தால் அதற்கு 100 விழுக்காடு வரி வசூலிக்க அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதனால் டாலர் வலுவாகியுள்ளது. 0.2 முதல் 0.6%வரை ஆசிய கரன்சிகள் சரிந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் தொடர் தலையீடு காரணமாக நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவாக 656.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. கடந்த 7 வாரங்களில் மட்டும் இது 47 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.