மீண்டெழுந்த சந்தைகள்…

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
புதன்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நல்ல முன்னேற்றம் கண்டது. மாலையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 730 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, புதன்கிழமை 254 புள்ளிகள் உயர்ந்து, 22 ஆயிரத்து 337 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது. அதானி துறைமுகம், பவர் கிரிட், டாடா ஸ்டீல்ஸ், அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎப்சி வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்து முடிந்தன
பொதுத்துறை வங்கிகள், ஊடகம், தொலைத்தொடர்பு, உலோகம் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் தலா 3 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தன. இதேபோல், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக நேற்றும் உயர்ந்தது. திங்கட்கிழமை ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், அடுத்த நாளே சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, 64 ஆயிரத்து 80 ரூபாயாக விற்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை ஒரு சவரன் விலை 440 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும், கடைக்கு கடை மாறும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்க..