தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..
கடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளில் பெரியளவு முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வியாழக்கிழமை தங்கள் போக்கை தலைகீழாக மாற்றியுள்ளனர். 11,756 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை அவர்கள் செய்துள்ளனர். அதே நேரம் மூன்றுநாட்களாக 11,112 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை வெளியே எடுத்துள்ளனர். நவம்பரில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 41,355 கோடி ரூபாய் நிதியை வெளியே எடுத்துள்ளனர். கடந்த அக்டோபரில் இந்த அளவு 1.14லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 8,718 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 38,760 கோடி ரூபாயை உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவாக 84.45ரூபாயாக சரிந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மற்றும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக வெளியாகும் தகவல்களால் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியும் தனது கடன் விகிதங்களை குறைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சீன பங்குகளை வாங்கும் அதே நேரம் இந்திய பங்குகளை விற்கும் பாணி தொடங்கி அது தற்போது வேகமெடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் பாதியில் உச்சத்தில் இருந்த இந்திய சந்தைகள் தற்போது வரை 8 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை, மருந்து நிறுவனங்கள் இதில் முக்கியமானவை. கார்பரேட் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் இந்திய சந்தைகளில் எதிர்பார்த்த அளவு சாதக சூழல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.