வோடஃபோனுக்கு உதவுமா அரசு?
பெரிய கடன் சுமையில் தவித்து வரும் வோடஃபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி செய்ய அதிக வாய்ப்புள்ளதாக APAC டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவீன்கில்லா தெரிவித்துள்ளார். தற்போது வரை இந்தியாவில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் 3 தனியார் நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆண்டு வருவாயில் சில மாற்றங்களையும், சில சீர்திருத்தங்களையும் மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொலை தொடர்புத்துறைக்கு நல்ல ஆதரவை மத்திய அரசு தருவதாக நவீன் கூறியுள்ளார். அடுத்தாண்டு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மேலும் சலுகைகள் அளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4.5 ஆண்டுகளில், 3 சுற்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், மேலும் கட்டணம் உயரவும் வாய்ப்புள்ளது என்றார்.
ரோமிங், பிரத்யேக உள்ளடங்கங்கள் கொண்டவற்றை பெற வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு என்ன உதவிகள் செய்யப்போகின்றது என்ற எதிர்பார்ப்பே அதிகளவில் இருக்கிறது. மத்திய அரசுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தர வேண்டிய தொகையில் 1.47லட்சம் கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக புகார் உள்ளது. இதில் சில கணித தவறுகள் இருப்பதாகக்கூறி தொலைதொடர்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடின. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அரசு என்ன சலுகை அளிக்கபோகிறது என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.