இணையத்தை அதிர வைத்த நிறுவனம்..
நிறுவனங்களை விரிவுபடுத்தவேண்டுமெனில் பங்குச்சந்தைகளில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டு அதில் கிடைக்கும் தொகையை வைத்து விரிவுபடுத்தலாம். டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இணையத்தையே கலக்கியுள்ளது. வெறும் 8 தொழிலாளர்களை வைத்துக்கொண்டு 12 கோடி ரூபாய் தேவை என்று கேட்டது டெல்லியைச் சேர்ந்த resourceful automobiles நிறுவனம். ஆனால் கேட்டதை விட 400 மடங்கு அதாவது 4 ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் கொட்டிக் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் 3 பேர் நிதிநிலை மற்றும் சட்டபூர்வ பணிகளை பார்க்கின்றனர். 2 பேர் விற்பனை மற்றும் சந்தை படுத்துதலையும், ஒருவர் மனிதவளத்தையும் நிர்வாகத்தையும் பார்க்கிறார். மீதமுள்ள இருவர் ஒட்டுமொத்த செயல்பாடுகளை பார்க்கின்றனர். இந்த 8 பேர் கொண்ட குழு, தங்கள் வணிகத்தை விரிவு படுத்த கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆரம்ப பங்கை வெளியிட்டனர். 26 ஆம் தேதி ஐபிஓ முடிந்தது. இந்நிலையில் முதலீட்டாளர்கள் 418 மடங்கு அதிகம் பணத்தை கொட்டியுள்ளனர். 10.2லட்சம் பங்குகளை ஒரு பங்கு 117 ரூபாய் என ஐபிஓவில் குறிப்பிட்டனர். குறைந்தபட்சம் ஆயிரத்து 200 பங்குகளை வாங்கவேண்டும் என்றும் வகை படுத்தினர். இந்த ஐபிஓவுக்கு ஸ்வஸ்திகா இன்வஸ்ட்மென்ட் நிறுவனம் நிர்வாகிகளாக இருந்தனர். கேமியோ கார்பரேட் சேவைகள் நிறுவனம் பதிவாளராக இருந்தனர். நிகுஞ் ஸ்டாக் புரோக்கர் நிறுவனம் சந்தை உருவாக்குபவராக நியமிக்கப்பட்டனர். பிரமிக்க வைக்கும் வகையில் முதலீடுகளை பெற்ற இந்நிறுவனம் உண்மையிலேயே திறமையான நிறுவனம்தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.