மதாபி மீது குவியும் புகார்கள்..
இந்திய பங்குச்சந்தைகளை முறைபடுத்தும் செபி அமைப்பின் தலைவாராக இருப்பவர் மதாபி புரி புச், இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. உலகளவில் அதிக முதலீடுகளை ஈர்த்து வரும் இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை பெற்றுள்ளது. இந்நிலையில்தான் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் மதாபி மீது சரமாரியாக புகார்களை முன்வைத்தது. அதில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் மதாபியின் கணவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் புதுப்புது சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மதாபிக்கு எப்படி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து சம்பளம் வருகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபல ஊடக நிறுவனமான ஜீ நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்திர கோயலும் மதாபியின் செயல்பாடுகள் தமக்கு அதிருப்தியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மதாபி பதவி விலக வலியுறுத்தி செபியின் தலைமை அலுவலகத்தில் அரிதிலும் அரிதாக ஊழியர்கள் ஆயிரம் பேர் போராட்டம் நடத்தினர். இத்தனை போராட்டங்கள், இத்தனை குற்றச்சாட்டுகளையும் மதாபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரின் பதவிக்காலம் வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளது. அவர் மீண்டும் செபியின் தலைவராகும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு எப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்கிறதோ அதை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கையை வைத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.